இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது

தன் தூரத்துச் சொந்தமான அந்த அண்ணனுடைய திருமண அழைப்பிதழை மேலும் கீழுமாக பலமுறை பிரைன் வாசித்துக்கொண்டிருந்தான்.

அதில் ஏதோ ஒன்றை அவன் புரிந்து கொள்ளவில்லை என்பதை அவனுடைய முகம் காட்டிக்கொண்டிருந்தது.

இதை கவனித்த பிரைனின் அப்பா, என்னடா விசயம் என்று அவனிடம் கேட்டார். அந்த அழைப்பிதழின் முதல் வரியில் எழுதியுள்ள “இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது” என்ற வாசகத்தை அவரிடம் பிரைன் சுட்டிக்காட்டி அதின் அர்த்த்ததைக் கேட்டான்.

அவர்களுடைய திருமணமானது கர்த்தருடைய விருப்பப்படியும், அவருடைய சித்தத்தின் படியும் அவராலே நடத்தப்படுகிறது, ஆகவே அவ்வாறு எழுதப்பட்டுள்ளதாக பிரைனின் அப்பா விளக்கம் கொடுத்தார்.

அந்த அண்ணன் அவர் திருமணம் செய்யப்போகும் பெண்ணிடம் பல வருடங்களாக பழகிவருவது எனக்குத் தெரியுமே அப்பா, நான் பள்ளிக்கூடத்திற்கு போகும் வழியிலே அவர்கள் இருவரும் நின்று பேசுவதையும் நான் பலமுறை பார்த்திருக்கிறேனே,

அப்படியானால் அவர்கள் விருப்பப்படிதானே இந்தத் திருமணம் நடைபெறுகிறது, பின்னை ஏன் “இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது” என்று அப்பாவி கடவுளின் மேல் பொய்பழியைப் போட்டிருக்கிறார்கள்? 

பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்று வெளிப்படுத்தின விசேஷம் 21:8-ல் எழுதப்பட்டுள்ளதாக என்னுடைய ஞாயிறு பள்ளி ஆசிரியர் சொல்லித்தந்தாரே….

என்று கேள்விகளை சராமாரியாக அடுக்கிக்கொண்டிருந்த பிரைனை முறைத்துப் பார்த்துவிட்டு அங்கிருந்து நழுவிச் சென்று விட்டார் அவனுடைய அப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !! Use Download button in the bottom.