ஜீவஆத்துமா

பிரைனின் அப்பாவின் நெருங்கிய நண்பர் அன்று அவனுடைய வீட்டிற்கு வந்திருந்தார். பிரைனின் அப்பாவும் அவருடைய நண்பரும் அவர்களுடைய ஆலயத்தில் மிக உயர்ந்த, முக்கியமான பொறுப்பில் உள்ளவர்கள்.

ஒருநாளும் இல்லாமல் மாமாவின் முகத்தில் ஆழ்ந்த சோகம் காணப்பட்டது அன்று. நன்றாக படிக்கிறாயடா? என்று கேட்டவரிடம், ஆமா மாமா நன்றாகப் படிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர்கள் அருகில் உட்கார்ந்து அவர்களுடைய உரையாடலை கேட்டுக்கொண்டிருந்தான் பிரைன்.

அவர்களின் உரையாடலிலிருந்து அவருடைய நாய் காணாமல் போய்விட்டது என்று பிரைனுக்குப் புரிந்தது.

3 நாட்கள் ஆகியும் அது இன்னும் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை, நான் அதைத் தேடாத இடமே கிடையாது, தெரிந்த அனைவரிடமும் விசாரித்து விட்டேன், ஒரு பலனும் இல்லை என்று கண்ணீரோடு கூறினார் மாமா.

அதைக்கேட்ட பிரைனின் அப்பா, “ஒருவேளை யாராவது பிடித்துக்கொண்டு போயிருக்கலாம் அல்லது எங்கேயாவது வாகனத்தில் அடிபட்டு இறந்து போயிருக்கலாம்” என்றார்.

“அய்யோ அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் என்றவர், கடவுளே, எப்படியாவது என் நாயை வீட்டுக்குத் திரும்பிவரப் பண்ணும்” என்று உருக்கமாக வானத்தைப் பார்த்து வேண்டிக்கொண்டார்.

ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு பிரச்சனையின் காரணமாக 2 குடும்பங்கள் ஆலயத்திற்கு வருவதை நிறுத்திவிட்டது பிரைனின் நினைவிற்கு வரவே, மாமா அந்த 2 குடும்பங்கள் மறுபடியும் ஆலயத்திற்கு வந்தார்களா, உங்களுக்கு அதைப்பற்றி ஏதாவது தெரியுமா? மறுபடியும் அவர்களை ஆலயத்திற்கு வரும்படி அழைத்தீர்களா? அல்லது யாரிடமாவது அவர்கள் என்ன ஆனார்கள் என்று விசாரித்தீர்களா? என்று மாமாவிடம் ஆவலோடு கேள்விகளை அடிக்கிக்கொண்டே போனான் பிரைன்.

அவர்கள் கொழுப்பெடுத்துப் போனார்களென்றால், எங்களுக்கு என்ன வேறு வேலையே கிடையாதா, அவர்களை தேடிச்செல்ல வேண்டுமென்பது எங்கள் தலையெழுத்தா? என்று கோபத்தோடு கேட்டார் மாமா.

அவருக்கு ஆமா போடுவது போல, போகிறவன் போகட்டும், இருக்க விருப்பமுள்ளவர்கள் இருந்தால் போதும் என்றார் பிரைனின் அப்பா.

இதற்கு மேல் கேள்வி கேட்டால் அடி கிடைப்பது நிச்சயம் என்பதை உணர்ந்த பிரைன், 3 நாட்களுக்கு முன் காணாமல் போன, ஜீவஆத்துமா இல்லாத நாய்க்காக பரிதபிக்கும் மாமாவுக்கும் அப்பாவுக்கும், மனம்மாறிப்போய் 1 மாதமாகியும் திரும்பிவராத ஜீவஆத்துமா உள்ள மனிதர்களைப் பற்றி கவலைப்பட்டு விசாரித்துத் தேடிப்போக நேரமுமில்லை மனமுமில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டே, அப்பாவுக்கும் மாமாவுக்கும் ஒரு உண்மையான ஆத்தும தாகத்தைக் கொடும் இயேசப்பா என்று முனங்கிக்கொண்டே வீட்டிற்குள்ளே சென்றான் பிரைன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !! Use Download button in the bottom.