காணிக்கை

ஞாயிற்றுக்கிழமை காலையில் தன்னுடைய கார் ரிப்பேர் ஆகிவிட்டதால் ஆட்டோவை பிடித்து ஆலயத்தில் வந்து இறங்கியது பிரைனின் குடும்பம். ஆட்டோ சார்ஜ் 80 ரூபாய் சார் எனக்கேட்ட ஆட்டோ டிரைவரிடம் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துக்கொடுத்துவிட்டு பாக்கி 20 ரூபாயை நீயே வைத்துக்கொள் என்று பெரியமனசு காட்டினார் பிரைனின் அப்பா.

ஆலயத்தின் அருகில் ரோட்டோரமாக பிச்சைக்கேட்டுக்கொண்டிருந்த பிச்சைக்காரர் இதை கவனித்துவிட்டு ஓடிவந்து சார் பெரிய மனசு பண்ணி ஏதாவது கொடுங்க சார் எனக்கேட்க தன் பர்ஸிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்தார் பிரைனின் அப்பா.

ஆட்டோவும் ஓடிவிட்டது பிச்சைக்காரரும் நகர்ந்து அடுத்த ஆளைத்தேடிப்போய்விட்டார்.

அந்த சமயத்தில் தன்னிடம் காணிக்கைப்போடுவதற்கு பணம் இல்லை என்பதை உணர்ந்த பிரைன் அப்பா எனக்கு காணிக்கைப் போட ரூபாய் தாருங்கள் எனக்கேட்டான்.

சற்று யோசித்த அவன் அப்பா தன்னுடைய பாக்கெட்டில் கையை விட்டு சலசலவென்று சப்தமிட்ட காசுகளில் கனத்த ஒரு 5 ரூபாய் காசை எடுத்து பிரைனின் கையில் திணித்தார்.

பிரைன் சற்று திகைப்போடு ஏம்பா வெறும் ஐந்து ரூபாய்தானா? என்று கேட்க நீ சின்னப்பையன்டா உனக்கு ஐந்து ரூபாயே அதிகம் என்று முறைப்போடு சொன்னார்.

மீண்டும் அதிர்ச்சி அடைந்த பிரைன் அப்பா நான் எனக்கு கேட்கவில்லை கடவுளுக்குத்தான் காணிக்கைக் கேட்டேன் கடவுள் ரொம்ப பெரியவருப்பா அவருக்கு நாமும் அதிகமாக கொடுக்க வேண்டும். ஆட்டோக்காரருக்கு டிப்ஸ் 20 ரூயாய் பிச்சைக்காரருக்கு கைநீட்டம் 10 ரூபாய் ஆனா கடவுளுக்கு வெறும் 5 ரூபாயா? இது ரொம்பத்தப்புப்பா.

கடவுள் ரொம்ப வருத்தப்படுவார்.

இரண்டு காசை வைத்திருந்த ஏழைப்பெண் கூட அவையெல்லாவற்றையும் கடவுளுக்கென்று கொடுத்தாங்களே நீங்களோ கட்டுக்கட்டா கரன்சி நோட்டில் சம்பாதித்துவிட்டு மிஞ்சிப்போன சில்லறை காசை மட்டும் கடவுளுக்கென்று கொடுக்கிறீங்களே இது நியாயமே இல்லை என்று பேசிக்கொண்டிருந்த பிரைனை பேசாம போய் தந்த காசை காணிக்ககைப்பெட்டியில போடு ஏதாவது அதிகபிரசங்கித்தனமா பேசினா தந்த காசையும் வாங்கிவிடுவேன் என்று சொல்லி அவனை ஒரு தள்ளு தள்ளிவிட்டார்.

சே என்ன உலகம்டா இது பிச்சைக்காரருக்குக் கிடைக்கும் மரியாதைகூட கடவுளுக்குக் கிடைக்காமல் போய்விட்டதே என்று மனதில் புலம்பிக்கொண்டே ஆலயத்திற்குள் நடந்து சென்றான் பிரைன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !! Use Download button in the bottom.