மழை வேண்டு(டா)ம்

தேசமெங்கும் மழையில்லாமல் மிகவும் வறட்சியாக காணப்பட்டதால், அன்று ஒரு விசேஷ உபவாசஜெபம் பிரைனின் ஆலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அங்கு வந்திருந்த ஒவ்வொருவரும் தங்களைத் தாழ்த்தி மிகவும் உருக்கமாக மழைக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

கடவுள் மனமிரங்கி நல்ல மழையை அன்றே தரவேண்டும் என்று ஊழியக்காரர்கள் உருகி ஜெபித்தார்கள்.

மாலை 6 மணிக்கு உபவாச ஜெபம் முடிந்து வெளியே வந்த பிரைனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது, காரணம் வெயிலின் உக்கிரம் முற்றிலும் மாறி வானமெங்கும் கருமேகக்கூட்டங்கள் வந்து குவிந்திருந்தது.

கொஞ்ச நேரத்தில் லேசாக மழைச்சாரல் வீசத்தொடங்கியது. கடவுள் தங்கள் ஜெபத்தைக்கேட்டுவிட்டார் என்று எல்லோருக்கும் ஒரே சந்தோஷம்.

இந்த நிலையில், அன்று மாலை முதல் பிரைனின் ஆலயத்திற்குச் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு திடலில் மூன்று நாட்கள் கன்வென்ஷன் வேறு ஒரு சபையினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அங்கு ஒரு பிரபலமான ஊழியக்காரர் செய்திகொடுப்பதனால், பிரைன் உபவாசஜெபம் முடிந்து நேராக அந்தக் கன்வென்ஷனுக்குச் சென்றான்.

மழைச்சாரல் சற்றுப் பலத்துக்கொண்டிருந்தது. கன்வென்ஷன் திடலின் அருகில் சென்ற பிரைனுக்குத் தலை சுற்றியது.

அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் சுமார் 50 பேர் கொண்ட கன்வென்ஷன் பொறுப்பாளர்கள் குழு நின்று மிகவும் உருக்கமாகவும் சத்தமாகவும் கடவுள் எப்படியாவது வரப்போகும் இந்த மழையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று போராடி ஜெபித்துக்கொண்டிருந்தனர்.

இன்னும் கொஞ்சநேரத்தில் ஒரு சொட்டு மழைக்கூட இந்த மண்ணில் விழாமல் கடவுள் மழையை நிறுத்தியே ஆக வேண்டும் என அந்தக்குழு ஜெபத்தில் போராடிக்கொண்டிருந்தது.

கடவுள் இந்த ஜெபத்தையும் கேட்டாரோ என்னமோ தெரியவில்லை, பெருமழையாக வந்தது ஒரு சொட்டுக்கூட அதன்பிறகு பெய்யாமல் அப்படியே ஓய்ந்தது.

கருமேகமெல்லாம் அந்த இடத்தைவிட்டு அகன்று எங்கோ சென்றுவிட்டது.

பிரைனுக்கு தலை சுற்றியது. ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன் யாருமே பொதுவாக கடவுளிடம் காத்திருந்து ஜெபித்து அவருடைய சித்தத்தை அறிந்து செயல்படுவது கிடையாது, மாறாக தங்கள் மனப்போக்கில் எல்லாவற்றையும் கடவுளின் பெயரால் செய்துவிட்டு, பின்பு தங்கள் சித்தத்திற்கு கடவுளை செயல்பட வைப்பதற்காக ஜெபித்பதையே இன்று கடவுளை நன்கு அறிந்த மக்கள் கூட வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

பின்பு எப்படி தேசத்தில் மழை பெய்யும்? கடவுளையே தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளும் இந்த தெய்வசித்தமற்ற காரியங்கள் தேசத்தில் என்றுதான் ஒழியுமோ என்று தன் தலையில் அடித்துக்கொண்டு வருத்தத்தோடு உட்கார்ந்தான் பிரைன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !! Use Download button in the bottom.