ஓய்வுநாள் கர்த்தருடையது

மணி எட்டாகுது, சீக்கிரம் ரெடியாகுடா, உன்னை ஆலயத்தில் விட்டபின்பு தான் நான் போய் கடையை திறந்து வியாபாரத்தை கவனிக்க வேண்டும்,  இன்று ஞாயிற்றுக்கிழமை, ஜெகஜோதியாக வியாபாரம் நடக்கும் நாள், அரைமணி நேரம் தாமதித்தாலே பல ஆயிரங்கள் கைவிட்டுப்போய் விடும் என்று சொல்லிக்கொண்டே பிரைனை அவன் அப்பா விரைவில் குளித்து ரெடியாவதற்காக விரட்டிக் கொண்டிருந்தார்.

அந்த ஏரியாவில் அவருடைய சூப்பர் மார்க்கெட் ஒரு பெரிய கடை என்பதால் நல்ல வியாபாரம் நடக்கும், ஞாயிற்றுக்கிழமை என்றால் இரண்டு மூன்று மடங்கு வியாபாரம் நடக்கும்.

ஆகவே ஞாயிற்றுக்கிழமை என்றால் சீக்கிரமாகவே கடையை திறப்பதற்காக அவசரப்படுவார்.

பிரைன் மனதுக்குள் யோசித்துக்கொண்டிருந்தான், மற்ற ஆறு நாட்களும் நல்ல வருமானம் வரத்தானே செய்கிறது, பின்னை ஏன் அப்பா ஞாயிற்றுக்கிழமையும் பணம் பணம் என்று சொல்லி ஆராதனைக்குக்கூட வராமல் கடையிலேயே உட்கார்ந்திருக்கிறார் என்று.

சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம் நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும் (எபி. 10:25) என்ற வசனம் பிரைனுக்கு ஞாபகம் வரவே,

அவன் அப்பாவைப்பார்த்து, அப்பா அன்று ஓய்வுநாளில் மன்னாவை சேர்க்கப்புறப்பட்ட மக்கள் மீது கர்த்தர் கோபங்கொண்டு,

“கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம் நாளில் இரண்டுநாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார் ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்” (யாத். 16:29). 

காரணம் ஓய்வுநாள் கர்த்தருடையது, அதை நாம் அவருக்காக செலவு செய்யவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

கர்த்தர் ஏற்கெனவே உங்களை ஆசீர்வதித்து மற்ற ஆறு நாட்களிலும் நல்ல வருமானத்தைத் தந்தபின்பும் நீங்கள் ஏன் ஞாயிற்றுக்கிழமையும் வியாபாரம், பணம் என்று ஓடுகிறீர்கள்? வாரத்திற்கு ஒரு நாளாவது ஆலயத்திற்கு வந்து கர்த்தரிடமிருந்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளுங்களேன்.

நல்ல வேளை நாம் கிருபையின் நாட்களில் வாழ்கிறோம், மோசேயின் காலத்தில் வாழ்ந்திருந்தால் “ஆறுநாளும் வேலைசெய்யலாம் ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள் அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்” (யாத். 31:15) என்ற வசனமே நம்மையெல்லாம் கொன்று போட்டிருக்கும்.

ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக (உபா. 5:12) என்னும் வசனத்தை கிறிஸ்தவர்களாகிய நாம் நிச்சயமாக கடைபிடிக்கவேண்டும் என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த பிரைனின் பேச்சை கொஞ்சம் கூட கேட்க மனதில்லாமல் அவனை கடகடவென்று இழுத்து வண்டியில் ஏற்றி ஆலயத்தில் இறக்கி விட்டுவிட்டு கடையை திறப்பதற்காக விரைந்து சென்றார் அவன் அப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !! Use Download button in the bottom.