பிள்ளையை தண்டியாமல் விடாதே

காலையிலேயே பிரைனின் அப்பாவைத் தேடி அவர் நண்பர் ஒருவர் வந்திருந்தார் அன்று. அவர் பிரைனின் அப்பாவிடம் பிரைனின் அண்ணனைப் பற்றி ஏதோ பேசுவதைக் கவனித்த பிரைன் அவர்கள் உரையாடலை கேட்கத் தொடங்கினான்.

அந்த நண்பர் அவன் அப்பாவிடம் பிரைனின் அண்ணன் பல இடங்களிலும் சுற்றித் திரிவதாகவும் கெட்ட நண்பர்களின் கூட்டத்தில் அவனை பல முறை பார்த்ததாகவும், சில நேரங்களில் போதை பாக்கு தின்பதாகவும் பல குற்றச்சாட்டுகளை சொன்னார்.

பிரைனின் அப்பா அவற்றை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அது மட்டுமல்ல, நான் கர்த்தருக்காக பல காரியங்களை செய்கிற ஒரு தேவ மனிதன், ஆகவே என்னுடைய பிள்ளைகளை கர்த்தர் வளர்த்துவார், அவர் பார்த்துக்கொள்வார் என்று பெருமிதத்தோடு சொல்லிவிட்டு அந்தப் பேச்சை அத்தோடு நிறுத்திவிட்டார்.

ஆகவே அவர் நண்பரும் அங்கிருந்து எழுந்து சென்று விட்டார். பிரைனுக்கு அவனுடைய அப்பாவின் பதில் முட்டாள்தனமாக இருப்பதாகத் தோன்றியது. அவனுடைய ஆலயத்தில் சமீபத்தில் நடந்த குடும்ப ஆசீர்வாத முகாமில் ஒரு போதகர் பேசிய காரியங்கள் அவன் நினைவிற்கு வந்தது.பிரைன் அவன் அப்பாவிடம் சென்று, “அப்பா, நீங்கள் கர்த்தருக்கென்று சில காரியங்கள் செய்வதென்னவோ உண்மைதான், ஆனாலும் தகப்பன் என்ற அந்தஸ்தை தேவன் உங்களுக்குத் தந்திருக்கிறார்.

அண்ணன் தவறான வழியில் நடப்பது தெரிந்த நீங்கள் அவனை தண்டிக்க ஏன் தயங்குகிறீர்கள்? எல்லாம் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்று சொல்லி உங்களையே நீங்கள் ஏமாற்றுவதைப் பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கிறது.

மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு (நீதி. 10:13),

பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும் அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும் (நீதி. 22:15),

பிள்ளையை தண்டியாமல் விடாதே அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான் (நீதி. 23:13),

நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே (நீதி. 23:14)

என்ற வசனங்களையெல்லாம் நீங்கள் படித்ததில்லையா? நியாயத்தீர்ப்பு நாளில் கர்த்தர் உங்களைப் பார்த்து, தகப்பன் என்ற ஸ்தானத்தில் நான் உன்னை வைத்தேனே, உன் மகனை நல்வழியில் கொண்டு வர நீ என்ன முயற்சி எடுத்தாய் என்று கேட்கமாட்டாரா?” என்று கேள்வியை அடுக்கிக்கொண்டே போனான்.

அவனுக்குப் பதில் சொல்ல விரும்பாத அவன் அப்பா கோபத்தோடு அங்கிருந்து சென்று விட்டார்.

இயேசப்பா எங்கப்பாவ ஒரு பொறுப்புள்ள அப்பாவாக மாற்றுங்கப்பா என பிரைன் மனதுக்குள் ஜெபித்து விட்டு அவனுடைய வேலையைப் பார்ப்பதற்குச் சென்று விட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !! Use Download button in the bottom.