ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்கிற தேவன்

“ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது” சங்கீதம் 136:4

நாம் ஆராதிக்கிற தேவன் நாம் கற்பனை கூட செய்ய முடியாத அளவு பெரிய தேவன். அதுமட்டுமல்ல அதிசயங்களை செய்கிறவர். வேறு ஒருவருடைய எந்தஒரு துணையுமின்றி தாம் ஒருவராகவே பெரிய அதிசயங்களை செய்து முடிக்க வல்லமையுள்ள தேவன்.

நாம் காண்கிற இந்த வானம், பூமி மற்றும் நாம் அறிந்திருக்கிற பிரமாண்டமான கோள்கள் யாவற்றையும் அவர் ஒருவராகவே அதாவது வேறு எவருடைய உதவியுமின்றி உண்டாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்.

இஸ்ரவேல் ஜனங்களுடைய வாழ்க்கையிலும் இந்த அதிசய தேவனின் ஆற்றல் மிக்க காரியங்கள் வெளிப்பட்டது. அதை அந்த ஜனங்கள் கண்ணார கண்டார்கள்.

அதைத்தான் சங்கீதம் 136:10-22 வசனங்கள் வாசிக்கும் போது நாம் அறிய முடிகிறது. இந்த தேவன் நம்முடைய வாழ்க்கையிலும் அதிசயங்களை செய்ய ஆவலாய் இருக்கிறார்.

அவர் நல்லவர் என்றும் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்றும் வேதம் கூறுகிறது.

கிருபை என்பது தகுதி இல்லாத நபர்களுக்கு தேவன் இரங்கி அளிக்கிற ஆசீர்வாதம்.

தேவனுடைய கிருபை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமல்ல, எந்நாளும் உள்ளது என்றும் நாம் அறிய முடிகிறது அதை நித்திய கிருபை என்றும் அவர் கிருபையில் ஐஸ்வரியம் உள்ளது என்றும் பார்க்கிறோம்.

ஒரு பெரிய பதவியில் அல்லது அதிகாரத்தில் இருக்கிற ஒருவர் சாதாரணமான மனிதர்களை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள்.

அனால் நாம் ஆராதிக்கிற தேவன் பெரிய ஆற்றல் உள்ளவரான போதும் அவருடைய மிகுந்த கிருபையினாலும், தயவினாலும் நம்மை நினைவு கூறுகிறார்.

அதைத்தான் 136-ம் சங்கீதத்தில் 23-ம் வசனத்தில் வாசிக்கிறோம். “நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது” என்று

ஆம் பிரியமானவர்களே, செங்கடலை பிளந்த, ராஜாக்களை அழித்த, சூரிய, சந்திரனை படைத்த பெரிய அதிசயங்களை செய்கிற தேவன் நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்து நமக்கு கிருபை அளிக்கிறார் இதை உணர்ந்து நம்முடைய தேவனை துதித்து போற்றுவோம்.

“இயேசுவே நீர் என்னை நினைத்து என்மேல் கிருபை வைத்ததற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்”

Bro. S. Nirmal,
Jesus With us Worship Centre,
Parvathipuram, Nagercoil.
Contact: Facebook | YouTube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !! Use Download button in the bottom.