திராட்சை ரசம்

கிறிஸ்மஸ் தினத்திற்கு 2 நாட்கள் முன்பிருந்து தொடங்கியது, புத்தாண்டு வரை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வீட்டில் நண்பர்களோடு சேர்ந்து ஒயின் மற்றும் மேல்நாட்டு மதுபானங்களை குடித்து சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தார் பிரைனின் அப்பா.

புத்தாண்டு அன்றும் தன் நண்பர்களோடு சேர்ந்து குடிக்கத் தயாரான அப்பாவைப் பார்த்த பிரைனுக்கு மிகவும் கோபமாக வந்தது. இயேசு கிறிஸ்துவை நன்கு அறிந்து அவரை பின்பற்றும் நாம் இப்படி செய்வது தவறு என்று பிரைன் அப்பாவிடம் கூறினான்.

அதற்கு அவர் உபாகமம் 14:26-ல் மதுபானம் குடிக்கலாம் என்று மோசேயே கூறியுள்ளார், ஆகவே இது ஒன்றும் தவறல்ல என்று கூறிவிட்டு குடிப்பதற்காக தயாரானார்.

அவரின் அலட்சியமான பதிலால் மிகவும் கோபமடைந்த பிரைன், அதே வசனத்திலேயே நீயும் உன் குடும்பத்தாரும் சேர்ந்து தானே அப்படிச்செய்ய வேண்டும் என்று மோசே சொல்லியுள்ளார், ஆகவே எனக்கும் நம்முடைய 2 வயது தம்பிக்கும் சேர்த்து குடிக்கத் தாருங்கள்.

நாங்களும் குடும்பத்தின் அங்கத்தினர் தானே? இதே வசனத்தில் லேவியனும், அதாவது கர்த்தருடைய ஊழியக்காரனும், இதைச்செய்யச் சொல்லியுள்ளதே, அப்படியானால் ஊழியக்காரர்களையும் வந்து குடிக்கச்சொல்வீர்களா? இதே கடவுள் தான் வேதத்தின் பல பகுதிகளிலும் மதுபானம் குடிக்கக்கூடாது என்று சொல்லி கண்டித்துள்ளார்.

சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ! (ஏசா.5:11)

என்று ஏசாயா தீர்க்கதரிசி எச்சரித்துள்ளாரே.

தேவனை அறியாதவர்கள் இச்சையின்படி செய்த காரியங்களை நாம் செய்யக்கூடாதென்று சொன்ன பேதுரு (1 பேது.4:2), மறுபடியும், சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டதுபோதும் அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம்.(1 பேது.4:3) என்று நமக்கு அறிவுரை தந்துள்ளாரே.

உபாகமம் 14:26-ல் கூறப்பட்டுள்ள மதுபானம் என்ற சொல்லுக்கு கிரேக்க மற்றும் எபிரேய பாஷைகளில் உள்ள அர்த்தத்தின்படி அது புதிய அல்லது பழைய திராட்சை ரசம் என்று பொருள் தானே தவிர போதை நிறைந்த சாராயம் அல்ல.

முன்னுக்குப்பின் முரணாக பேச தேவன் ஒன்றும் மனிதன் அல்ல.

வேதவசனங்களை நன்றாக புரிந்துகொண்டு அதன்படி செயல்படுங்கள். அதை விட்டுவிட்டு இப்படி அரைகுறையாக புரிந்துகொண்டு மற்றவர்களுக்கு இடறலை ஏற்படுத்தாதிருங்கள் என்று மூச்சுவிடாமல் கோபத்தோடு பேசிவிட்டு இனி நின்றால் அப்பாவிடமிருந்து உதை கிடைக்கும் என்று தெரிந்து ஓடி ஒளிந்து கொண்டான் பிரைன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !! Use Download button in the bottom.