பிரைன் அவனுடைய அப்பாவுடன் கூட பைக்கில் கடைக்குப் போய்விட்டு திரும்பி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.

கோடை விடுமுறையானதால் வழியெங்கும் எங்கு பார்த்தாலும் சுவர்களில் விடுமுறை வேதாகமப் பள்ளி,

கோடை விடுமுறை வகுப்புகள், நற்செய்திக்கூட்டங்கள் என போஸ்டர்கள் கண்ணைக்கவர்ந்தது.

அதில் அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள் என்று தலைப்பிட்டு ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர் பிரைனை மிகவும் கவர்ந்தது.

செய்தியாளரின் பெயருக்குப் பின்னால் தீர்க்கதரிசன வரம் பெற்ற அற்புத சுகமளிக்கும் தேவ தாசன் என்ற அடைமொழி பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்தது.

அது என்னவென்று புரியாமல் குழம்பிய பிரைன் அப்பாவிடம் கேட்டான், “அது அவர் படித்த படிப்பின் பெயரா” என்று.

அப்பா சொன்னார், அது படிப்பல்ல, கடவுள் அவருக்கு குணமளிக்கும் வரத்தையும், தீர்க்கதரிசனத்தை பேசும் வரத்தையும் கொடுத்துள்ளார்,

ஆகவே அவர் ஜெபித்தால் உடனே எந்த நோயும் மாறிவிடும், அவர் சொல்லும் காரியங்கள் சரியாக நடக்கும், ஆகவே அதைத்தான் அப்படி எழுதியுள்ளனர் என்று. அதைக்கேட்ட பிரைனனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சற்று யோசித்த பிரைன், “அதாவது, தனக்குக் கடவுள் கொடுத்த வரத்தைப்பற்றிய சுயவிளம்பரம் இது” என்று சொல்லிவிட்டு தொடர்ந்து சொன்னான், அப்பா

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது (பிலி. 2:5)

என்று பவுல் எழுதியுள்ளாரே, அதாவது நம்மை நாம் தாழ்த்தி வெறுமையாக்கி பிரதிபலிக்க வேண்டும்.

குஷ்டரோகியை குணப்படுத்திய இயேசு, இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு (மத். 8:4)

என்றல்லவா சொன்னார்.

எனக்கு குணமளிக்கும் வரமிருக்கிறது என்று விளம்பரம் செய்யவா சொன்னார்?

அது மட்டுமல்ல, தம்மையே கூட, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார் (மத் 16:20)

என்று தானே வேதம் சொல்கிறது? தான் மனிதனாக வாழ்ந்த நாட்களில் தன் தந்தையாகிய தேவனுக்குக் கிடைக்க வேண்டிய புகழ் தனக்கு வரவேண்டாம் என்று வெறுத்து தன்னைத்தான் தாழ்த்தி வாழ்ந்தார்.

ஆகவே சிலுவையில் வெற்றிச்சிறந்தார். ஆனால் இன்று நான் இயேசுவின் ஊழியக்காரன் (வேலைக்காரன்) என்று பெருமையாக பேசும் பலர்,

சுயவிளம்பரத்திற்காக தங்கள் பெயருக்கு முன்னாலும் பின்னாலும், தங்களைத் தாங்களே, அப்போஸ்தலர், தீர்க்கதரிசி, சுகமளிப்பவர் என்று கொஞ்சமும் கூச்சப்படாமல் சுயவிளம்பரப்படுத்திவிட்டு,

இயேசுகிறிஸ்து சிலுவையின் வழியாக கொடுத்த இரட்சிப்பை பின்னுக்குத் தள்ளுவது எத்தனை பெரிய பாதகம் அல்லவா அப்பா, என்று பேசி முடித்தான் பிரைன்.

முகமெல்லாம் கோபத்தால் இறுகிய பிரைனின் அப்பா, எந்த பதிலும் சொல்லாமல் பைக்கை இன்னும் வேகமாக ஓட்டிக்கொண்டு வீடு போய் சேர்ந்தார்.

Author: Bro. John Sam Raj