டிசம்பர் மாதமானதால் பிரைனின் ஆலயத்தின் சார்பாக தினந்தோறும் பஜனை பாடல் (carol service) நடந்துகொண்டிருந்தது. ஏன் அப்பா இந்த பஜனையை ஒவ்வொரு வருடமும் நடத்துகிறீர்கள் என்று பஜனை பொறுப்புத்தலைவரான தன் அப்பாவிடம் கேட்டான் பிரைன்.

இயேசுகிறிஸ்து உலகில் வாழும் மனிதர்களை பாவத்திலிருந்து மீட்டு பரலோகத்தில் கொண்டு சேர்ப்பதற்காக இந்த பூமியில் மனிதனாக உருவெடுத்துப்பிறந்த நற்செய்தியை அவரை அறியாத மக்களுக்குச் சொல்வதற்காகத்தான் இந்த பஜனை என்று சுருக்கமாக விளக்கமளித்தார் பிரைனின் அப்பா.

சற்று நேரம் யோசித்த பிரைன் சொன்னான் அன்று இயேசுகிறிஸ்து பிறந்த செய்தியை தேவதூதர்கள் ஆட்டிடையர்களுக்கு அறிவித்தார்கள் ஏனென்றால் அவர்களுக்கு இயேசு பிறந்த விசயம் தெரியாது.

இயேசுகிறிஸ்துவும் சீஷர்களிடம்

“நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” (மாற் 16:15)

என்று கட்டளை கொடுத்தார்.

அதாவது இதுவரை இயேசுகிறிஸ்துவைப் பற்றி கேள்விப்படாதவர்களுக்குத்தான் நாம் அவரைப்பற்றி சொல்லவேண்டும். அதுதான் உண்மையான ஒரு பஜனை ஆகும்.

ஆனால் நீங்களோ ஒவ்வொரு வருடமும் ஒரே கிறிஸ்து பிறப்புப் பாடல் அதே வாழ்த்து அதே தெருக்கள் அதே வீடுகள் அதிலும் குறிப்பாக நம்முடைய ஆலயத்திற்கே வரும் பெரும்பாலான மக்களின் வீடுகள் என்று பாரம்பரியமாக சென்று கிறிஸ்துபிறப்பை சொல்லிக்கொண்டிருப்பதனால் என்ன பிரயோஜம் அப்பா? என்று கேட்ட பிரைனின் தலையில் ஒரு கொட்டு கொட்டிவிட்டு அன்றைய தினத்திற்கான பஜனையை தலைமை தாங்குவதற்காக வேகமாக புறப்பட்டு ஆலயத்திற்குச் சென்றார் பிரைனின் அப்பா.

நற்செய்தி அறிவிப்பது என்றால் என்னவென்று இவர்களுக்குப் புரியவைங்க இயேசப்பா என்று முனங்கிக்கொண்டு தலையை தடவிக்கொண்டே படிப்பதற்காக தன் அறைக்குள் சென்றான் பிரைன்.

—– அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம் —-

Author: Bro. John Sam Raj