பிரைனின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள திருமண மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு விசேஷ ஜெபக்கூடுகையில் கலந்துகொண்டிருந்தான் பிரைன்.

 

ஜெபவேளையின் போது அவனது அருகில் இருந்த பக்கத்து வீட்டு மாமா மிகவும் மனமுருகி ஜெபித்துக்கொண்டிருந்தார் இவ்வாறு, “கடவுளே நான் வாழ்வதே உமக்காகத்தான், நீங்கள் என்ன கேட்டாலும் நான் தருகிறேன்.

 

என் உடல், உயிர், உடமையெல்லாமே உமக்குத்தான். நான் வாழ்வதே உமக்காகத்தான், எனக்கென்று எதுவுமே வேண்டாம், நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்கிறேன் . . .”. பிரைன் குழப்பமாக அவரையே கவனித்துக்கொண்டிருந்தான்.

 

ஒரு வாரத்திற்கு முன்பாக தன் கிணற்றில் தண்ணீர் இல்லையென்று மாமா வீட்டில் தண்ணீர் பிடிக்கவந்த எதிர்வீட்டுக்காரரை ‘கடவுளிடம் கேள், உன் கிணற்றிலும் தண்ணீர் சுரக்கச்செய்வார்’ என்று சொல்லி மனசாட்சியே இல்லாமல் திரும்ப அனுப்பியவரல்லவா இந்த மாமா!

 

தன்னுடைய வறுமையை விவரித்துச் சொல்லி கொஞ்சம் ரூபாய் கடனாக கேட்க வந்த தன் தூரத்துச் சொந்தக்காரரை, ‘கடன் வாங்குவதை கடவுள் வெறுக்கிறார்’ என்று தத்துவம் பேசி கருணையே இல்லாமல் திருப்பி அனுப்பியவர் அல்லவா இந்த மாமா! உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் உயிருக்குப்போராடிய தன் நண்பனைப் பற்றி, ‘அவன் கடவுளுக்குப்பயந்து நடந்திருந்தால் வாதை அவன் கூடாரத்தைத் அணுகியிருக்காது’ என்று வீர வசனம் பேசி, மருத்துவமனை பக்கம் போய் எட்டிக்கூட பார்க்காதவர் அல்லவா இந்த மாமா!

 

ஜெபம் முடிந்து கெம்பீரத்தோடு வெளியில் வந்த மாமா பிரைனை பார்த்தவுடன் ‘Praise the Lord தம்பி’; என்று கைகொடுத்தார்.

 

அதுவரை பொறுத்துக்கொண்டிருந்த பிரைன் மாமாவைப் பார்த்துக் கேட்டான், “மாமா, இயேசு கிறிஸ்துவுக்காக நீங்கள் எந்தவொரு தியாகத்தையும் செய்வீர்கள் போலிருக்கிறதே.

 

ஆனால் ஒன்று உங்களுக்குத் தெரியுமா? இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று ஒரு ராஜாவாக இப்பொழுது பரலோகத்தில் வீற்றிருக்கிறார். அவர் ‘எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தா’, ‘என்னுடைய தேவைக்குக் கொஞ்சம் பணம் தா’, ‘எனக்காக நீ ஜெபி’ என்று உங்களிடம் வந்து செஞ்சமாட்டார். மாமா, ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்,

 

‘இன்றைக்கு உங்களைச் சுற்றி வாழ்கிற எளியவர்களான ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ (மத் 25:45)

 

இயேசுகிறிஸ்து ஏற்கெனவே சொல்லியிருக்கிறாரே? ஏளியவர்களிடம் கருணையே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள், இயேசுவுக்காக அதைச்செய்வேன், இதைச்செய்வேன் என்று ஜெபத்தில் மாத்திரம் மனம் உருகுகிறீர்களே? இதனால் உங்களுக்கு ஒரு நன்மையும் நடக்கப்போவதில்லை” என்று சொல்லிவிட்டு மாமாவுக்கு “டாடா” காட்டிவிட்டு வேகமாக அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டான் பிரைன்.