பிரைனின் அப்பாவும் அவருடைய நண்பர்களும் ஏதோ ஒரு குடும்பத்தைப் பற்றி பேசி நகைத்துக்கொண்டிருந்தனர்.

“கர்த்தருக்குப்பயந்து அவர் வாழ்ந்து கொண்டிருந்தவரையிலும் அவருடைய குடும்பம் மிகவும் வளமிக்கதாக இருந்தது, எப்பொழுது ஆலயத்திற்கு வருவதையும் நிறுத்திவிட்டு உலகவாழ்க்கையில் மூழ்கி இஷ்டம் போல வாழத்தொடங்கினாரோ, அன்றோடு அவருடைய ஆசீர்வாதமான வாழ்க்கையை கர்த்தர் எடுத்துவிட்டு துன்பத்தின் மேல் துன்பமாக கொடுத்து நல்ல பாடம் புகட்டிக்கொண்டிருக்கிறார்”

என்று சிரித்துக் கொண்டே அவர்களில் ஒருவர் சொன்னார்.

“கடவுளை விட்டுத்தூர சென்றவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னும் வேண்டும், நன்றாக வேதனை அனுபவிக்கட்டும்” என்று நக்கலாக சொன்னார் இன்னொரு நண்பர்.

“கடன் மிகுதியால் அவருடைய வீட்டை விற்கப்போவதாக கேள்விப்பட்டேன், அடிமாட்டு விலைக்கு அதை வாங்குவதற்கு இதுதான் நல்ல சந்தர்ப்பம்” என்றார் வேறொருவர்.

“இந்தக் குடும்பத்தை எவனாலும் காப்பாற்ற முடியாது” என்று கூறி பெருமிதம் கொண்டார் பிரைனின் அப்பா. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த பிரைன்,

“அப்பா, நீங்கள் இப்படி அந்தக் குடும்பத்தாரைப்பற்றி சந்தோஷப்படுவது கர்த்தருடைய பார்வையில் அருவருப்பான ஒன்று என்பது உங்களுக்குத் தெரியாதா?

அவர் கர்த்தரை விட்டுத்தூரச் சென்றதும், அதனால் இப்பொழுது மிகவும் துன்பப்பட்டுக்கொண்டிருப்பதும் உண்மைதான்.

இப்படிப்பட்ட நேரத்தில் நீங்கள் அவர் மறுபடியும் மனந்திரும்பி கடவுளைத் தேடுவதற்காக ஜெபிக்க வேண்டுமே தவிர, அவர்கள் துன்பப்படுவதைப்பார்த்து மகிழக்கூடாது.

எசேக்கியேல் 35-ம் அதிகாரத்தில் சேயீர் மலைக்கு விரோதமாக கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் உங்களுக்கெதிராக வரும் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

கர்த்தர் தன்னுடைய பிள்ளைகள் வழிவிலகி போகும்போது கஷ்டத்தை அனுமதிப்பது இயற்கைதான், அதைப்பார்த்து நீங்களெல்லாரும் குதூகலமடைவது சாபத்தைக் கொண்டுவரும் என்று எசேக்கியேல் 35-ம் அதிகாரத்தில் ஆணித்தரமாக கர்த்தர் கூறியுள்ளார்.

அவன் வீடு மற்றும் சொத்துக்கள் என்னுடையவைகளாகும், நான் அவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுவேன் என்று நீ சொல்லுகிறபடியினால், நீ அவர்கள்மேல் வைத்த வர்மத்தினால் செய்த உன் கோபத்துக்குத்தக்கதாகவும், உன் பொறாமைக்குத்தக்கதாகவும் நான் செய்வேன்.

இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாய்ச் சொன்ன உன் நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன்.

“பூமியெல்லாம் மகிழும்போது நான் உன்னைப் பாழாயிருக்கும்படி செய்வேன். இஸ்ரவேல் வம்சத்தாரின் சுதந்தரம் பாழாய்ப்போனதைக் கண்டு மகிழ்ந்தாயே, உனக்கும் அப்படியே சம்பவிக்கச்செய்வேன் சேயீர்மலையே, ஏதோமே, நீ முழுதும் பாழாவாய்”

என்று அந்த அதிகாரத்தில் கூறப்பட்ட வசனங்களையும் சேர்த்துக்கூறினான் பிரைன்.

“அப்பா தயவுசெய்து இந்த குணத்தை நீங்களெல்லாரும் மாற்றிவிடுங்கள், இல்லையேல், ஒரு நாள் வரும், அன்று அந்த குடும்பத்தைக் குறித்து சந்தோஷப்பட்டதற்காக, நம் குடும்பங்கள் கர்த்தரால் அழிக்கப்படும் என்பது நிச்சயம்”

என்று பயத்தின் மிகுதியில் பேசிக்கொண்டிருந்த பிரைனை சற்றும் பொருட்படுத்தாத அந்த டிப்டாப் தலைவர்கள் மறுபடியும் அந்தக்குடும்பத்தைப் பற்றி ஏதேதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு கர்த்தரையும் வேதத்தையும் குறித்த ஒரு உண்மையான அறிவு இல்லாததை நினைத்து மனம் நொந்த , அவர்களை திருத்தும் கர்த்தாவே என்று மனதில் நினைத்துக்கொண்டு அங்கிருந்து விலகிச் சென்றான்.

Author: Bro. John Sam Raj