பிரைனின் வீட்டில் குடும்ப ஜெபம் நடந்துகொண்டிருந்தது. அன்று அவன் அப்பா மிகவும் கோபத்துடன் பொறுமையிழந்து காணப்பட்டார்.

கடைசி ஜெபத்தை அவரே மின்னல் வேகத்தில் சொல்லிக் கொண்டிருந்தார், “. . . . . எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்”.

தன் பக்கத்து வீட்டுக்காரர் ஏதோ தன்னைப் பற்றி தவறாக பேசிவிட்டார் என்ற செய்திதான் அவரை இந்த அளவிற்கு கோபப்படுத்தியிருந்தது.

ஜெபம் முடிந்த கையோடு வேகமாக எழும்பி தன் பக்கத்து வீட்டுக்காரரை ஒரு வழி பண்ணிவிட வேண்டும் என்ற வெறியோடு சென்றவரை, அப்பா என்று கூப்பிட்டு நிறுத்தினான் பிரைன்.

உனக்கு என்ன வேண்டும் என்று பார்வையாலேயே கேள்வி கேட்டு சற்றே நின்றவரிடம், “அப்பா உங்கள் பாவங்கள் ஒரு நாளும் மன்னிக்கப்படுவதற்கு வாய்ப்பேயில்லை.


இப்பொழுது தான் நீங்கள் ஜெபித்தீர்கள் ‘எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்’ என்று, ஆனால் செயலில் அதைக் காணோமே? பின்னை எப்படி கடவுள் உங்கள் பாவங்களை மன்னிப்பார்? பக்கத்து வீட்டுக்காரர் உங்களுக்கு விரோதமாக பேசினால் அதை மன்னித்து விட்டுவிட வேண்டியது தானே? எதற்கு இப்படி ஆவேசம் கொண்டு கொதித்தெழுகிறீர்கள்? இந்த ஜெபத்தைச் சொல்லிக்கொடுத்த இயேசு தொடர்ந்து அடுத்த இரண்டு வசனங்களில்,


‘மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். (மத் 6:14-15)’

என்று மிகத்தெளிவாக சொல்லியுள்ளாரே. ‘எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்’ என்று ஜெபித்து விட்டு சோதனையை நீங்களே தலைமேல் எடுத்துவைப்பதற்காக இப்படி ஓடுகிறீர்களே? தயவுசெய்து, என்ன ஜெபிக்கிறோம் என்பதை புரிந்த பிறகு ஜெபியுங்கள், அல்லது ஜெபிக்காமலேயே இருந்துவிடுங்கள்” என்று மூச்சுவிடாமல் பேசிமுடித்த பிரைனை ஒரு குழப்பத்தோடு பார்த்துக்கொண்டு நின்றார் அவனுடைய அப்பா!

Author: Bro. John Sam Raj