அன்று ஆலயம் முடிந்தவுடன் அங்கிருந்த எல்லோருடைய கவனமும் பேச்சும் சமீப காலமாக ஈராக், சிரியா, லிபியா மற்றும் சில நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் வன்முறை கொலைகளைப் பற்றி இருந்தது.

இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கொன்றுகுவிக்கப்படுதைப் பற்றி திகிலுடன் விவாதித்துக்கொண்டிருந்தனர்.

சிலர் தங்களுடைய மொபைல் போனிலிருந்த அது சம்பந்தமான போட்டோக்களை மற்றவர்களிடம் காட்டினர்.

எல்லோரும் கொஞ்சநேரம் அந்த மக்களுக்காக பரிதாபப்பட்டுவிட்டு வீடுகளுக்குச் செல்லத்தயாராயினர்.

இதை அருகில் நின்று கவனித்துக்கொண்டிருந்த பிரைனுக்கு ஒன்று தெளிவாக புரிந்தது,

கொலை நடக்கிறதைக் போட்டோவிலும் வீடியோவிலும் பார்த்து வந்த பயத்தினால் ஒரு பச்சாபிதாபம் தான் மக்களுக்கு வந்ததே தவிர,

தாங்கள் அதற்காக அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற மனநிலையோ அல்லது மனவிருப்பமோ வந்ததாக யாரையும் பார்க்கமுடியவில்லை.

பிரைன் அங்கிருந்த கூட்டத்தாரைப் பார்த்து, “எங்கேயோ நடக்கிறது, நமக்கென்ன என்று நீங்கள் இன்று மெத்தனமாக இருந்தால், ஒரு நாள் கடவுளிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அது மட்டுமல்ல, இன்று அங்கு நடப்பது, நாளை நமக்கு நடக்காது என்பது என்ன நிச்சயம்?

நான் சமாதான இந்தியாவில் சுகமாக இருக்கிறேன் என்று நினைத்து மெத்தனமாக இருந்தால்,

‘நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே. நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள் நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்’ (எஸ்தர் 4:13-14)

என்று மொர்தெகாய் எஸ்தருக்குச் சொன்ன வார்த்தைகள் நமக்கும் பொருந்தும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

தீவிரவாதிகள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களைச் செய்யும் கொடுமைகள், நாம் கூடிப்பேசிக்கொள்வதாலோ, போராட்டம் என்று கொடிபிடிக்கப்போவதாலோ நிறுத்தப்படப்போவதில்லை.

மாறாக இன்றே முழங்கால்படியிட்டு உபவாசத்தோடும் கண்ணீரோடும் நம் தனிப்பட்ட ஜெபத்திலும், சபையாராகவும் நாம் ஜெபிக்கத் தொடங்க வேண்டும்.

அப்படியானால் இவைகள் நிச்சயமாக நிறுத்தப்படும். இது நம்மேல் விழுந்த கடமையாகும்” என்று பேசி முடித்தான் பிரைன்.

பிரைன் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், அவனை ஒரு வினோத பொருளாக பார்த்தனர்.

இயேசுவே இவர்களுக்கு உணர்வுள்ள இருதயத்தைக் கொடும் என்று தன் மனதில் ஜெபித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் பிரைன்.

Author: Bro. John Sam Raj