பிரைனின் வீட்டில் அன்று ஒரே பரபரப்பாகக் காணப்பட்டது. பிரைனின் அப்பா அவர் செல்லும் ஆலயத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் உள்ள நபர்.

சமீபத்தில் நடந்த ஊழியம் சம்பந்தமான ஒரு விசயத்தில் பிரைனின் அப்பா தவறு செய்துவிட்டதாக அவதூறான குற்றச்சாட்டை அந்த ஆலயத்திலுள்ள வேறுசிலர் கூறி பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியிருந்தனர்.

ஆகவே பிரைனின் அப்பாவின் நண்பர்கள் பலர் அவருடைய வீட்டில் கூடி அதைப்பற்றி காரசாரமாக பேசிக்கொண்டிருந்தனர்.

“கடவுளுடைய ஊழியம் சம்பந்தமான விசயத்தில் நான் செய்யாத ஒரு குற்றத்தை எப்படி அவர்கள் என்மேல் சுமத்தலாம்? அவர்களை சும்மாவிடக்கூடாது”

என்று பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தார் பிரைனின் அப்பா.

“அடுத்த சங்கக் கூட்டத்தில் குற்றஞ்சாட்டியவர்கள் மேல் அவதூறு வழக்கை தொடுத்து அவர்களை இல்லாமல் செய்துவிடவேண்டும்”

என்று அவருடைய நண்பர்கள் பிரைனின் அப்பாவின் பேச்சுக்கு ஒத்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.

ஒரு மணி நேரமாக நடந்த காரசாரமான விவாதமானது, குற்றஞ்சாட்டியவர்கள் மேல் தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டிக்கவேண்டும் என்ற ஒருமனதான முடிவோடுகூட நிறைவடைந்தது.

அதன் பின்பு அங்கிருந்த பிரைனின் அப்பாவின் நண்பர்கள் தங்கள் வீடுகளுக்கு வீரநடைபோட்டுச் சென்றனர்.

நடந்தவற்றைப் பாhர்த்துக்கொண்டிருந்த பிரைன், ஏன் அப்பா இப்படி ஒரு கொடூரமான முடிவு என்று கேட்டான். “நான் கடவுளுக்கு நல்ல காரியம் செய்திருக்க, அவர்கள் எப்படி என்மேல் தவறான பழிபோட்டுப் பேசலாம்?

அவர்களை சும்மா விட்டால் கடவுளுக்கே பொறுக்காது” என்று மறுபடியும் சரவெடி போல வெடித்துச் சிதறினார் பிரைனின் அப்பா.

சற்று யோசித்த பிரைன், “அப்பா, நீங்கள் கடவுளுக்காக செய்த காரியத்தினிமித்தம் தானே உங்களைப் பற்றி தவறாக கூறினார்கள்?

அது கடவுளுடைய பார்வையில் நல்ல காரியந்தானே? அதற்கு ஏன் நீங்கள் இப்படி எரிமலையாய் வெடிக்கிறீர்கள்?

என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள் சந்தோஷப்பட்டு, களிகூருங்கள் பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்@ உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. (மத் 5:11-12)

என்று இயேசு கிறிஸ்து இப்படிப்பட்ட சூழ்நிலையைக்குறித்து மிகத்தெளிவாக விளக்கங்கொடுத்துள்ளாரே.

அதுமட்டுமல்லாமல்,

பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள் (ரோம 12:19)

என்று பவுல் அவர்கள் மிகத்தெளிவாக கூறியுள்ளாரே?

இவற்றையெல்லாம் நன்கு அறிந்து வைத்திருந்தும் நீங்கள் உங்கள் மேல் தவறான குற்றச்சாட்டைச் சொன்னவர்களை நடவடிக்கை என்ற பெயரில் பழிவாங்கத் துடிக்கிறதைத்தான் கடவுளே பொறுக்கமாட்டார்”

என்று நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்த பிரைனை பிடித்து ஒரு தள்ளு தள்ளிவிட்டு தன்னைப்பற்றி தவறாகப் பேசியவர்கள் மேல் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதில் மும்முரமாக வீட்டைவிட்டு இறங்கி சென்றுகொண்டிருந்தார் அவன் அப்பா.

‘கர்த்தாவே, உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ என் அப்பாவிற்கு கற்றுக்கொடுங்கப்பா’

என்று மனதில் ஜெபித்துக்கொண்டு தன் வேலையைப் பார்ப்பதற்காக சென்றான் பிரைன்.

Author: Bro. John Sam Raj