மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த பிரைனின் அப்பா மிகவும் கோபத்தோடு காணப்பட்டார்.

அவரைவிட வயதிலும் அனுபவத்திலும் சிறியவர்கள் சொன்ன பல கருத்துக்களை அவர் பகிரங்கமாக எதிர்த்தது மட்டுமல்லாமல் அவர்களை தரக்குறைவாகவும் பேசினார்.

தான் அந்த ஆலயத்தில் பல ஆண்டுகளாக மிகவும் உயர்ந்த ஒரு பதவியிலும் பொறுப்பிலும் இருப்பதாகவும், வேறு யாருடைய ஆலோசனையும் அங்கு தேவையில்லை என்பதாகவும் அவர் மற்றவர்களோடு எதிர்த்து நின்றார்.

தன் தந்தையின் செயல்பாடுகளைப் பார்த்த பிரைன் சொன்னான்,

“அப்பா நீங்கள் நடந்துகொள்ளும் விதம் சரியல்ல. கிறிஸ்தவ வாழ்க்கை என்பது எல்லோரையும் சமமாகவும் சகோதர சகோதரியாகவும் பார்ப்பதாகும். இதைத்தான் இயேசுகிறிஸ்துவும் அறிவுறுத்தினார். நான் பெரியவன், எல்லோரும் நான் சொல்வதைத்தான் கேட்கவேண்டும், என்னைத்தான் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வெறும் உலகப்பிரகாரமான மனிதர்களின் செயல்பாடு. இப்படி எதிர்பார்த்து செயல்பட்டுவிட்டு, நான் கடவுளுடைய ஊழியக்காரன் என்று சொல்வதில் ஒரு பிரயோஜனமுமில்லை.

மத்தேயு சுவிசேஷத்தில், ‘புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்’ (மத். 20:25-28) என்று எழுதியுள்ளதே.

நீங்களோ, எப்பொழுதும், நான் இங்கு உயர்ந்தவன் என்றே பேசிக்கொண்டிருக்கிறீர்களே.

நீங்கள் உண்மையிலேயே கிறிஸ்துவினுடைய ஊழியக்காரன் என்றால், மற்றவர்களுக்காக ஜீவனை கொடுக்க ஆயத்தமாக இருக்க வேண்டுமே தவிர, மற்றவர்கள் ஜீவனை எடுக்க ஓடக்கூடாது” என்று பேசிக்கொண்டிருந்த பிரைனை கோபத்தோடு ஓரங்கட்டித்தள்ளிவிட்டு, தன் பாணியில் தொடர்ந்து மற்றவர்களை வசைபாடிக்கொண்டிருந்தார் பிரைனின் அப்பா.

‘ஊழியக்காரன்’ என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தத்தையாவது என் அப்பாவிற்கு கற்றுக்கொடுங்கள் கடவுளே என்று மனதில் ஜெபித்துவிட்டு அங்கிருந்து விலகிச்சென்றான் பிரைன்.

Author: Bro. John Sam Raj