புதுவருடத்தை முன்னிட்டு பிரைனின் அப்பா ஏழைகளுக்கு உதவ வேண்டுமென்று முடிவு செய்து ஒரு பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

பல ஆயிரக்கணக்கான ரூபாயை அவர் தனிப்பட்ட முறையில் செலவு செய்து ஏறக்குறைய 50 ஏழை குழந்தைகளுக்கான புதுத்துணி மற்றும் அவர்களுக்கான படிப்புச் செலவு என தனித்தனியாக பொதிகளை அடுக்கி பிரமிக்கும் வகையில் அதற்கான மேடையில் வைத்திருந்தார்.

அவற்றை கொடுப்பதற்காக அவருடைய ஆலயத்தின் போதகர் மற்றும் அவருடைய ஊரிலுள்ள சில பெரிய மனிதர்களையும் அழைத்திருந்தார்.

ஏராளமான பொதுமக்களும் அந்த நிகழ்ச்சியை காண வந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பெரியவர்கள், தனி ஒரு மனிதனாக நின்று இவ்வளவு பெரிய உதவியை ஏழைகளுக்குச் செய்யும் பிரைனின் அப்பாவை புகழ்ந்து தள்ளினர்.

தானதர்மம் முடிந்த பிறகு அந்த ஏழைகளுக்கு உணவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பிறகும் எல்லோரும் பிரைனின் அப்பாவை பற்றி புகழாரம் சூட்டினர்.

வீட்டிற்கு வந்த பிறகும் பிரைனின் அப்பாவின் முகத்தில் இருந்த பெருமிதம் மாறவில்லை.

“எல்லோரும் என்னைப்பற்றி பெருமையாக பேசியதை கவனித்தாயா, கடவுளும் என்னைக்குறித்து மிகுந்த சந்தோஷமடைந்திருப்பார் இன்று, ஒரு நாள் நான் பரலோகம் போகும்போது எனக்கென்று பல பொக்கிஷங்கள் அங்கு வைத்திருப்பார் அல்லவா?”

என்று தன் மனைவியைப் பார்த்து பெருமிதத்துடன் கேட்டு சந்தோஷப்பட்டார்.

இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த பிரைன் மெதுவாக அவரிடம் வந்து பயந்துகொண்டே சொன்னான்,

“அப்பா உலகம் வேண்டுமானால் உங்களைக் குறித்து மிகவும் பெருமையாக பேசலாம்,

ஆனால் ஏழைகளுக்கு தானதர்மம் அல்லது உதவி செய்யும் போது இப்படி ஊரைக்கூட்டி பெயரெடுப்பதற்காக செய்தால் அதன் பலன் இங்கேயே தீர்ந்துவிட்டது என்பதை நீங்கள் அறியீர்களா?

இப்படிப்பட்ட காரியங்களுக்கு பரலோகத்தில் ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை.

மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 6:1-2)

என்று இயேசுகிறிஸ்து கூறியதை நீங்கள் அறியாமலா இருக்கிறீர்கள் “

என்று தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்த பிரைனை, அதிகபிரசங்கி, நீ போடா உன் வேலையை பார்த்துக்கொண்டு என்று முறைத்துவிட்டு,

மறுபடியும் தன்னைப்பற்றிய காரியங்களைக் குறித்து பெருமையாக தன் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார் பிரைனின் அப்பா.

அப்பாவின் பரிதாப மனநிலையைக்கண்டு வேதனைப்பட்டுக்கொண்டே அங்கிருந்து சென்றான் பிரைன்.

Author: Bro. John Sam Raj