ன் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு, நான் நம்புகிறது அவராலே வரும். சங்கீதம் 62:5

நாம் எதிர்பார்க்கிற நன்மைகள் கைகூடி வர தாமதமாகும் போது சோர்வு வருவது இயல்பு.

அனால் அதையே சாதகமாக்கி நம்முடைய எதிரியான சாத்தான் எதிர்மறையான காரியங்களை நினைவில் கொண்டுவந்து தேவன் மேல் உள்ள விசுவாசத்தை சிதைக்கக் கூடும் ஆகவே நாம் எப்போதும் தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

நாம் ஆராதிக்கிற தேவன் எப்படிப்பட்டவர் என்றும். அவருடைய வல்லமை எப்படிப்பட்டது என்றும் அறிந்திருந்தால் மாத்திரம் விசுவாச வாழ்க்கையில் முன்னேறி செல்லமுடியும்.

நம்முடைய தேவன் நம்பிக்கைக்குரியவர். இதுதான் அவருடைய மேலான குணம்.

அவருடைய குணாதிசயங்களை நன்கு அறிந்த மனிதன் தான் விசுவாச சோதனையில் வெற்றி பெற முடியும்.

பொய் சொல்லவும், மனம் மாறவும் தேவன் மனிதன் அல்ல. ஆகவே சூழ்நிலைகள் எதிர்மறையாக இருந்தாலும் அவற்றை மாற்ற வல்லமையுள்ள தேவனை அறிந்து நம்முடைய விசுவாசத்தை வலிமையாக்க கற்று கொள்ளவேண்டும்.

மேல் குறிப்பிட்ட வசனம் இக்கட்டான நிலையில் சங்கீதக்காரனாகிய தாவீது செய்கிற ஜெபம் ஆகும். பொதுவாக மனிதனுடைய முயற்சி தோல்வி அடையும்போது பலர் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் உதவியை நாடுவார்கள்.

அனால் நன்மையான எந்த ஈவும் மனிதனுக்கு பரத்திலிருந்து உண்டாகி பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது என்று வேதம் கூறுகிறது.

ஆகவே எப்போதும் நம்முடைய ஆத்துமாவை அவரையே நோக்கி அமர்ந்திருக்க பழக்குவிக்க வேண்டும்.

இதை வாசிக்கிற நீங்கள் எதோ ஒரு நன்மைக்காக காத்திருப்பவர்களாக இருக்கலாம், சோர்ந்து போகாதிருங்கள் தேவனை நோக்கி அமர்ந்திருங்கள் உங்கள் நம்பிக்கை ஒரு நாளும் கெட்டு போகாது.

நீங்கள் நம்புகிற நன்மையான பதில் நிச்சயம் கர்த்தராலே வரும். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்.

இயேசுவே எல்லா சூழ்நிலையிலும் உம்மையே நோக்கி அமர்ந்திருக்க எனக்கு கற்று தாரும்!

Author:

Bro. S. Nirmal,

Jesus With us Worship Centre,

Parvathipuram, Nagercoil.