அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். ரோமர் 8:11

கிருபையின் நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற கர்த்தருடைய பிள்ளைகளே, நமக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய ஆசீர்வாதம் என்னவென்றால் அது பரிசுத்த ஆவியானவர்தான்.

இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட அத்தனை பேரும் தேவனை அப்பா பிதாவே என்று அழைக்கும் படி ஆவியானவர் நமக்கு அருளப்பட்டிருக்கிறார்.

இந்த ஆவியானவர் வெறும் ஆற்றல் மட்டுமல்ல, அவர் ஆள் தத்துவமுள்ளவர், திருத்துவத்தின் மூன்றாம் நபர், பழைய ஏற்பாட்டு காலத்தில், தீர்க்கதரிசிகள், நியாயாதிபதிகள், கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்ட ராஜாக்கள் என்று குறிப்பிட்ட சில மக்களிடத்தில் தான் கர்த்தருடைய ஆவியானவர் வெளிப்பட்டார்.

அனால் இயேசுகிறிஸ்து பரமேறினபோது ஜனங்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், தேற்றரவாளனாகிய இந்த ஆவியானவரை பெந்தேகோஸ்தே நாளில் ஒருமனதோடு கூடியிருந்த 120 பேரின் மேலும் ஊற்றினார்.

யோவேல் தீர்க்கதரிசியின் மூலம் உரைக்கப்பட்ட மாம்சமான யாவர் மேலும் என்னுடைய ஆவியை ஊற்றுவேன் என்ற வாக்குறுதி நிறைவேறினது.

இந்த கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற நமக்கு ஆவியானவருடைய நடத்துதல் மிக முக்கியமானது. இந்த ஆவியானவர் நமக்குள்ளாக வாசம் பண்ணி, நம் கூடவே இருந்து நம்மை போதித்து நடத்துகிறவராயிருக்கிறார்.

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் நாட்களில் ஊற்றப்பட்ட ஆவி உலர்ந்து போன எலும்புகளுக்குள் ஜீவனைத்தர உண்மையுள்ளது என்று சொன்னால் இன்று நமக்குள் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்முடைய சாவுக்கேதுவான சரீரங்களையும் உயிர்பிப்பது அதிக நிச்சயமல்லவா!

இதை வாசித்து கொண்டிருக்கிற தேவனுடைய பிள்ளையே உன் வாழ்க்கையில் செத்துப்போன எல்லா காரியங்களையும் தேவ ஆவியானவர் இந்த நாட்களில் மறுபடியும் உயிர்ப்பிக்க வல்லமையுள்ளவர்,

உடல் உறுப்புகளை உயிர்ப்பித்து புது பெலனைத் தருவார் பொருளாதாரத்தில், குடும்ப வாழ்க்கையில் எதிர்கால திட்டத்தில் புது ஜீவனைத் தந்து நடத்துவார்.

உயிர்ப்பிக்கிற ஆவியானவரே எனக்குள் நீர் வாசம் பண்ண என்னை அர்ப்பணிக்கிறேன்!

Author:

Bro. S. Nirmal,

Jesus With us Worship Centre,

Parvathipuram, Nagercoil.