சந்தோஷப்பட்டு களிகூருங்கள் பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். உங்கள் முன்னிருந்த தீர்க்க தரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. மத்தேயு 5:12

இவுலகத்தில் படித்தவர்களையும், செல்வந்தர்களையும், அதிகார மிக்கவர்களையும் பாக்கியவான்கள் என்பது வழக்கம்.

அல்லது அவ்வாறு இருந்தால் தான் சந்தோஷத்தோடு வாழ முடியும் என்று பலர் கருதுகின்றனர்.

எல்லா வளமும் பெற்ற மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையின் கடைசி நாட்களில் தான் சம்பாதித்த அனைத்தையும் விட்டு செல்வதால் அதைக்குறித்து கவலையோடு மரிக்கிறான்.

ஆனால் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து இவுலகத்தின் ஓட்டத்தை முடிக்கிறவர்கள் சந்தோஷத்தோடே தேவ ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கின்றார்கள்.

ஒரு குறிப்பிட்ட காலம் மாத்திரம் தான் இவுலகத்தில் நாம் வாழ முடியும். ஆனால் சரீர மரணத்திற்கு பிறகு முடிவில்லாத வாழ்க்கை நமக்கு இருக்கிறது.

இப்படியிருக்க எத்தனை பேர் அதைக் குறித்து சிந்தித்திருக்கிறீர்கள்? எப்போதும் இவுலக வாழ்க்கையை குறித்தே சந்தோஷமும் கவலையும் அடைகிறோம்.

மத்தேயு 5-ம் அதிகாரத்தில். துயரப்படுகிறவர்களையும் நீதியினிமித்தம் தும்பப்படுகிறவர்களையும், இதயத்தில் சுத்தமுள்ளவர்களையும், ஆவியில் எளிமையுள்ளவர்களையும் பாக்கியவான்கள் என்று இயேசு கூறுகிறார்.

இந்த உலகத்தில் சம்பாதித்து சேர்த்து வைக்கிற ஒன்றையும் நித்திய காலமாய் நாம் அனுபவிக்க முடியாது. எல்லாவற்றையும் இந்த உலகத்தில் அனுபவித்த சாலமோன் ராஜா கூட அதில் வருத்தமும் சஞ்சலமுமே மிஞ்சியது என கூறுகிறார்.

கர்த்தருக்காக வைராக்கியத்தோடு வாழும் போது சில துன்பங்களும் நெருக்கங்களும் நம் வாழ்க்கையில் வருவது உண்டு.

நம்மைப்பார்த்து தான் கர்த்தர் சொல்லுகிறார் “சந்தோஷப்பட்டு களிகூருங்கள்” என்று.

நம்முடைய பலன் பரலோகத்தில் பெருகிக்கொண்டே இருக்கிறது. இங்கு நம்முடைய பரிசுத்த வாழ்க்கை மற்றும் கர்த்தருக்காக செய்கிற பணிகள் ஓவ்வொன்றிற்கும் பலன் நிச்சயம் பரலோகத்தில் காத்திருக்கிறது.

நாம் இயேசுவை சந்திக்கும் போது நம்முடைய சந்தோஷம் நிறைவாகும் பொருட்டு யாவையும் பெற்று கொள்ளுவோம்.

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.

Author:

Bro. S. Nirmal,

Jesus With us Worship Centre,

Parvathipuram, Nagercoil.