நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக அப்பொழுது, கர்த்தருக்கு முன்பாக காட்டு விருட்சங்களெல்லாம் கெம்பிரிக்கும். சங்கீதம் 96:12

ஒரு நாட்டின் வளர்ச்சி அதிலுள்ள குடிமக்களின் வளர்ச்சியை பொறுத்தே அமையும்.

அதாவது பொருளாதாரம், கல்வி, மருத்துவம் போன்ற முக்கியமான துறைகளில் தனி மனித வளர்ச்சியைப் பொறுத்தே அது தீர்மானிக்கப்படுகிறது.

வளர்ந்த மேலை நாடுகளில் உள்ள தனி மனித வளர்ச்சி என்பது சிறந்து விளங்குகிறது.

அது அந்த நாட்டை ஆளுகிறவர்களை பொறுத்து அமைகிறது. மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டத்தை அமல் படுத்தும் எந்த ஒரு நாடும் முன்னேற்றத்தை நோக்கியே பயணிக்கும்.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி கூட அதில் பணிபுரியும் பணியாளர்களின் திறனை பொறுத்தே அமைகிறது. அதை நிர்வாகிப்பவர்கள் சரியாக நிர்வாகித்தால் தான் அதுவும் சாத்தியமாகும்.

குடும்பத்தில் கூட குடும்பத்தை நடத்துபவர்களை பொறுத்தே குடும்ப வளர்ச்சியும் இருக்கும்.

ஆகவே ஆளுகை என்பது மிக முக்கியம், உலக நாடுகள் முழுவதும் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து காணப்படும் இந்த நெருக்கமான வேளையில் உலகத்தை உருவாகின சிருஷ்டிகரின் தயவு நிச்சயம் உலக நாடுகளுக்கு தேவை.

இயேசு தன்னுடைய ஊழிய போதனைகளில் தேவனின் அரசாட்சியை குறித்து அநேக இடங்களில் போதித்தார்.

பிதாவே உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக என்றும் ஜெபிக்க கற்று கொடுத்தார்.

பரலோக ராஜ்யத்தில் ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வித்தியாசமே இல்லை.

ஆகவே பரலோக வாசிகள் அனைவரும் மகிழ்ந்தது களிகூறுதலோடு நித்திய காலமும் வாழுவார்கள்.

அதே மகிழ்ச்சியை நாம் வாழுகிற இந்த உலக நாட்களிலும் பெற முடியும்.

எப்படியெனில் எந்த ஒரு மனிதன் அல்லது ஒரு தேசம் இறைவனின் ஆளுகைக்கு தன்னை முழுவதும் அர்பணிக்கின்றதோ அந்த நாடும் அதன் குடிகளும் சந்தோசமாக எல்லா வளமும் பெற்று வாழ முடியும்.

நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட நம்முடைய சிந்தையை ஆவியானவருடைய ஆளுகைக்கு ஒப்புக்கொடுக்கும் போது நம்முடைய குடும்பமும் சந்தோஷமாக வாழ முடியும்.

ஆவியானவரே என்னை ஆளுகை செய்து, உம்முடைய சித்தத்தின் படி நடத்தும், ஆமென்.

Author:

Bro. S. Nirmal,

Jesus With us Worship Centre,

Parvathipuram, Nagercoil.