என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும். சங்கீதம் 17:5

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, வாழ்க்கையின் பல சூழ்நிலைகளில் பல முடிவுகளை நாம் எடுப்பதுண்டு.

சரியான நேரத்தில் நேர்த்தியான முடிவுகளை எடுத்தால் தான் அந்த செயலில் நாம் வெற்றியை காணமுடியும்.

முடிவெடுப்பதில் ஏற்படும் சிறு தவறு கூட பெரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

தேசத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நாட்டு மக்களை பாதிக்கும், குடும்பத்தில் முடிவெடுக்கும் காரியங்கள் குடும்பத்தை பாதிக்கும்.

தனிப்பட்ட வாழ்க்கையில் எடுக்கும் முக்கியமான முடிவுகள், எதிர்காலத்தையே பாதிக்கக்கூடும்.

ஆகவே நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு அடிகளும் கவனமாக வைக்க வேண்டியது அவசியமாகிறது.

ஆகவே நாம் போகிற பாதையில் நமக்கு நல்ல ஆலோசனை தேவை. கர்த்தருடைய வேதம் நம்முடைய கால்களுக்கு தீபமாகவும், பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

அந்த வெளிச்சத்தில் நாம் நடக்கும் போது கால்கள் இடறிப்போவதில்லை. மனுஷனுக்கு செவ்வையாக தோன்றுகிற வழிகள் உண்டு அனால் அதன் முடிவு மரணம் என்று வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

ஆகவே ஒவ்வொரு செயலை தொடங்கும் முன்பும் தேவ ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியம்.

அறிவில் தேறியவர்கள் கூட சில தீர்மானங்களை தவறாக எடுப்பது உண்டு.

அனால் தேவன் தருகிற ஆலோசனைகள் ஒருபோதும் தவறுவதில்லை.

ஆகவே தான் இந்த சங்கீதத்தை இயற்றியவர் என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும் என்று வேண்டுகிறார்.

கவனமாக ஒவ்வொரு அடிகளையும் எடுத்து வைக்கும் யானைக்கு கூட அடி சறுக்கும் என்று ஒரு பழமொழி உண்டு.

ஆகவே எப்போதும் கர்த்தரை நமக்கு முன்பாக வைத்து நம்முடைய பாதையில் முன்னேறி செல்ல வேண்டும். அப்பொழுது நம்முடைய நடைகள் உறுதிப்படும்.

நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

Author:

Bro. S. Nirmal,

Jesus With us Worship Centre,

Parvathipuram, Nagercoil.