“நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். யோவான் 10:11”

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே மேய்ப்பன் என்பவன் ஆடுகளை போஷிப்பவன், பராமரிப்பவன், பாதுகாப்பவன், விசாரிப்பவன்.

நல்ல தகுதியான மேய்ப்பனின் கண்காணிப்பில் இருக்கும் மந்தை செழிப்பாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.

நானும் நீங்களும் கர்த்தருடைய ஜனங்களாயும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம். நாமல்ல அவரே நம்மை உண்டாக்கினவர்.

ஆகவே அவர் நம்முடைய மேய்ப்பராயிருக்கிறபடியால் நாம் ஒன்றுக்கும் தாழ்ச்சியடைந்து போவதில்லை.

அவரே நம்மை புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்களண்டையில் கொண்டு போய் விடுகிறவர்.

நம்முடைய சரீரத்தை மட்டுமல்ல ஆத்துமாவையும் தேற்றுகிற நம்முடைய மனதை புரிந்து கொண்ட நல்ல மேய்ப்பன் நமக்கு இருக்கிறார்.

மந்தையில் இருக்கும் ஆடுகளை வேட்டையாட ஓநாய்கள் வரும் போது கூலியாட்கள் எதிர்த்து போராடாமல் ஓடி ஒளிந்து விடுவார் ஆனால் நல்ல மேய்ப்பனோ தன் ஆடுகளுக்காக ஜீவனையும் கொடுக்க துணிகிறார்.

அது போல தான் இயேசு பிசாசின் தந்திரமாகிய பாவம் என்ற கொடிய அழிவிலிருந்து ஆடுகளாகிய நம்மை மீட்டு விடுவிக்க தன்னுடைய ஜீவனை ஏற்கனவே சிலுவையிலே ஈந்தார்.

உங்களுக்காக இயேசு தன்னுடைய ஜீவனை கொடுத்தார் என்று விசுவாசிக்கிறீர்களா?

நீங்கள் கர்த்தருடைய கண்காணிப்பில் அவருடைய மந்தையில் இருக்கிறீர்கள் என்று மறந்துவிடாதீர்கள்.

இந்த மந்தையில் இருக்கும் ஆடுகளாகிய நாம் நல்ல மேய்ப்பனின் சத்தத்தை அனுதினமும் கேட்கிறவர்களாக இருக்க வேண்டும்.

செவி கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். அப்பொழுது நல்ல மேய்ச்சலை நாம் காண முடியும் கர்த்தருக்குள் செழிப்பாய் சுகமாய் வாழ முடியும்.

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிபார்ப்பேன்.

Author:

Bro. S. Nirmal,

Jesus With us Worship Centre,

Parvathipuram, Nagercoil.