“கர்த்தர் உன்னைக் காக்கிறவர், கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்” சங்கீதம் 121:5

என் அன்பிற்குரியவர்களே சமீப நாட்களாக “கொரோனா” என்ற வைரஸ் சீனாவிலிருந்து உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.

இது மனித குலத்திற்கு விடுக்கப்பட்ட பெரிய சவால் என்று உலக சுகாதார மையம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எல்லா நாடுகளும் மேற்கொண்டுள்ளன.

இதைத் குறித்த தவறான வதந்திகளும் குறுஞ்செய்திகள் மூலமாக உலகம் முழுவதும் பரப்பப்பட்டு வருகிறது.

ஆனால் அதனால் நீங்களும் நானும் தேவனுடைய கண்காணிப்பின் பாதுகாப்பில் இருப்பதால் எதைக் குறித்தும் கலங்க தேவையில்லை.

இந்த 121-ம் சங்கீதத்தில் 8 வசனங்கள் உள்ளன அதில் 5 வசனங்களில் “காப்பவர்” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

ஒரே அதிகாரத்தில் பலமுறை ஒரே வார்த்தை வருவதால் நாம் அதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

அந்த வார்த்தை உறுதியாகிறது. கர்த்தர் நம்மை காப்பதால் வெயிலானாலும், நிலவானாலும் நம்மை சேதப்படுத்துவதில்லை.

நம்முடைய ஆத்துமா அவருடைய பாதுகாப்பில் இருப்பதால் எந்த தீங்கும் நம்மை அணுக முடியாது. நாம் போகிற வருகிற வழிகளில் அவருடைய தூதர்களுக்கு கட்டளையிட்டு நம்மை எல்லா நாட்களிலும் பாதுகாக்கிறார்.

சங்கீதம் 91-ன் முதல் 12 வசனங்களை வாசிக்கும் போது அவருடைய பாதுகாப்பை புரிந்து கொள்ள முடியும்.

குறிப்பாக பிசாசின் கண்ணிகள், கொள்ளை நோய்கள், சங்காரம், பொல்லாப்பு மற்றும் வாதை இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்து வழிநடத்தும், வல்லமையான கரிசனையுள்ள தேவன் நமக்கு நிழலாயிருக்கிறார்.

நிழல் என்பது நாம் நடக்கும் போதும் அமரும் போதும் ஓடும் போதும் நம்மைத் தொடரக் கூடியதாக இருக்கிறது. அதுபோல சர்வ வல்லமையுள்ள தேவன், நமது வலது பக்கத்திலே நமக்கு நிழலாயிருக்கிறார்.

நம்மைக் காகிறவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை. எல்லா சூழ்நிலைகளிலும் நம்மைக் கண்காணித்து நம் கூடவே அவர் வருவதால் தீமையான காரியங்கள் நம்மை சேதப்படுத்துவதில்லை

ஆகவே எந்தவித அச்சுறுத்துதல்களுக்கும் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள் ஏனென்றால் நீங்கள் உன்னதமானவருடைய மறைவில் இருக்கிறீர்கள்.

சர்வ வல்லவருடைய நிழல் உங்களை ஆளுகை செய்கிறது.

அந்த நிழலைத் தாண்டி எவனும் உங்களை தொட முடியாது. நீங்கள் கர்த்தருடைய நேரடியான கண்காணிப்பில் இருப்பதை உணர்ந்து அவருக்கு நன்றி செலுத்துங்கள்.

“இயேசுவே நீர் என்னை கண்காணித்து என் வாழ்வில் நிழலாய் என்னைத் தொடர்வதால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்”

 

Author:

Bro. S. Nirmal,

Jesus With us Worship Centre,

Parvathipuram, Nagercoil.