“என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” பிலிப்பியர் 4:19

ஒரு நாள் பேதுருவும், யோவானும் தேவாலயத்திற்கு போகும் போது, ஆலய வாசலண்டையிலே ஒரு மனுஷன் அவர்களிடத்தில் பிச்சைக் கேட்டு கொண்டிருந்தான்.

தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் போதே சப்பாணியாய் இருந்த அந்த மனுஷனை சுமந்து கொண்டு வந்து அங்கே தினமும் வைப்பார்கள்,

அவன் வாழ்க்கையில் இருந்த அந்த பெரிய குறையினால் பிச்சை கேட்ட அவனைப் பார்த்து பேதுரு வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி அவனைப் பிடித்து தூக்கி விட்டான்.

உடனே அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான். பிறவியிலேயே அவனுடைய சரீரத்தில் இருந்த பெரிய குறை ஒரு நொடி பொழுதில் நிரந்தரமாக அவனை விட்டு மாறினது .

ஆம் நாம் குறைவோடு இருப்பது கர்த்தருடைய சித்தமல்ல, நாம் நிறைவான ஆசிர்வாதங்களோடு வாழ வேண்டுமென்பதே அவருடைய விருப்பம்.

தேவன் வல்லமையில் ஐசுவர்யமுள்ளவர் அவருடைய ஐசுவர்யத்தின்படி நம்முடைய எல்லா குறைவுகளையும் மாற்றி நம்மை ஆசீர்வதிக்கிறார்.

உங்கள் வாழ்க்கையில் இருக்கிற ஏதாவது ஒரு குறை நீங்கள் முன்னேறி செல்ல முடியாமல் முடக்கி வைத்திருக்கிறதா?

உங்கள் வாழ்க்கையில் இருக்கிற குறை எதுவாக இருந்தாலும் அதை மாற்ற இயேசு போதுமானவர். மனிதனால் கூடாதது தேவனால் கூடும்.

சிலுவையின் மூலமாக இயேசு கிறிஸ்து நம்முடைய எல்லா குறைவுகளையும் மாற்றி விட்டார். ஒரு பெரிய தெய்வீக பரிமாற்றம் அங்கே நடந்தது.

நாம் செல்வந்தர்களாய் வாழ அவர் தரித்திரரானார். நமக்கு சமாதானத்தை உண்டாக்கும் ஆக்கினையை அவர் ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களை சுமந்தார்.

நம்முடைய நோய்களை அவர் சுமந்து தீர்த்துவிட்டார். நமக்கு எதிராக இருந்த கையெழுத்தையும் குலைத்துப்போட்டார்.

ஆகவே இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாம் பரிபூரண ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும்.

தேவன் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசிர்வாதங்களாலும் நம்மை ஆசீர்வதிக்கிறார். எபேசியர் 1:3

ஆகவே உங்கள் வாழ்க்கையில் இருக்கிற குறைவுகளை எண்ணி கவலைபடாதிருங்கள்.

நீங்கள் நினைக்கிறதற்கும் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் மிகவும் அதிகமாய் உங்களுக்குள் கிரியை செய்கிற அவருடைய வல்லமையின்படி உங்களை நிச்சயம் மாற்றி அதிசயமாய் வாழ வைப்பார்.

“கர்த்தாவே என்வாழ்க்கையில் இருக்கிற குறைவை மாற்றி, பூரண நன்மைகளால் என்னை நிரப்புவதற்காய் உமக்கு ஸ்தோத்திரம்”

 

Author:

Bro. S. Nirmal,

Jesus With us Worship Centre,

Parvathipuram, Nagercoil.