“அன்பு ஒருக்காலும் ஒழியாது, தீர்க்கதரிசங்களானாலும் ஒழிந்து போகும், அந்நிய பாஷையானாலும் ஒழிந்து போகும், அறிவானாலும் ஒழிந்து போகும்” 1 கொரிந்தியர் 13:8

இந்த உலகத்தில் வாழுகிற எந்த ஒரு மனிதனும் அன்பை நாடுகிறான் அல்லது யாரவது என்னை நேசிக்கமாட்டார்களா என்று அன்பிற்காக ஏங்குகிறான்.

சிலர் இந்த அன்பை பயன்படுத்தி பலரை எமாற்றுகின்றார்கள். வாலிப வயதில் எதிர்பாலர் மேல் ஒரு வகையான ஈர்ப்பு வருகிறது.

அதை காதல் என்றும் அன்பு என்றும் கூறுகிறார்கள். உண்மையாக இந்த வகையான உணர்வு மெய்யான அன்பாக முடியாது.

கணவன் மனைவியாக அவர்கள் வாழ்க்கையை வாழும் போதுதான் உண்மையான அன்பா அல்லது பாலியல் ஈர்ப்பா என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கிறிஸ்தவர்களாகிய நாம் சபைக்கு செல்லும் போது ஆவியின் வரங்கள் நம்முடைய வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்புகிறோம் அது தவறல்ல ஆனால் எந்த விதமான வரங்காளானாலும் ஒழிந்து போகும். அன்போ ஒருநாளும் ஒழியாது என்று பார்க்கிறோம்.

அந்த அன்பு நமக்கு பூரணமாக என்று நம்மில் எதனை பேர் விரும்புகிறோம்? அடுத்தவர்களுடைய அன்பை பெற விரும்பும் நம்மில் எத்தனை பேர் உண்மையாக பிறரிடத்தில் அன்பாக இருக்கிறோம்?

முதலாவது தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் அன்பு கூற வேண்டும் இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால் உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக என்பதே. (மத்தேயு 22:39).

நீ உன்னை எவ்வளவு நேசிக்கிறாயோ அதைப்போல் பிறரையும் நேசிக்கவேண்டும். இது நம்முடைய வீட்டிலிருந்து ஆரம்பமாக வேண்டும்.

கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள், இனத்தார், பிற சமூகம், பிறமொழி பேசுவோர், பிற நாட்டார், என்று நம்முடைய அன்பின் எல்லை பெறுக வேண்டும்.

இந்த அன்பின் முதல் தன்மை என்னவென்றால் மன்னிக்கும் குணம். கிறிஸ்து நம்மை மன்னித்து போல நாம் மனுஷருடைய தப்பிதங்களையும் மன்னிக்க வேண்டும்.

அன்பு சகலத்தையும் தாங்கும், நம்பும், சகிக்கும், அன்பிற்கு பொறாமையில்லை இந்த பூரண அன்பு ஒரு மனிதனிடத்தில் இருக்குமென்றால் அவன் சந்தோஷமாய் இந்த உலகத்தில் வாழ முடியும்.

தன் சகோதரனை பகைத்து தேவனிடத்தில் அன்பாயிருக்கிறேன் என்று சொல்லுகிறவன் பொய்யன் என்று வேதம் சொல்லுகிறது.

ஆகவே இந்த அழியாத அன்பை நம் வாழ்க்கையில் பிரதிபலிக்க நாடுவோம். தேவனும் அன்பாகவே இருக்கிறார்,

இந்த உலகத்தில் இயேசு கிறிஸ்துவை நமக்காக பலியாக அனுப்பி இவ்வளவாய் நம்மிடத்தில் அன்பு கூர்ந்தார்.

“இயேசுவே என்னைப் போல் பிறரையும் நேசிக்க எனக்கு கற்று தாரும்” ஆமென்

Author:

Bro. S. Nirmal,

Jesus With us Worship Centre,

Parvathipuram, Nagercoil.