உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும். ஏசாயா 61:7

மனிதன் வாழுகின்ற நாட்களில் மகிழ்ச்சியாக இருக்க பலமுயற்சிகளை மேற்கொள்ளுகிறான்.

பணம் இல்லாத காரணத்தால் பலர் தங்களது சந்தோஷத்தை இழக்கின்றனர். சிலர் புகழ் இல்லாததால் மகிழ்ச்சி இல்லாமல் வாழ்கின்றனர்.

இன்னும் சிலர் முயற்சியில் வெற்றி இல்லாத காரணத்தால் ஏமாற்றம் அடைந்து துக்கம் அடைகின்றனர்.

மேல்கூறிய மூன்று காரியங்களும் முழுமையாக பெற்றவர்தான் சாலமோன் ராஜா.

அவர் விரும்பிய எல்லா உலக சுகத்தையும் அனுபவித்தவர்.

அனால் எல்லாம் மாயை என்றும் மனதுக்கு சஞ்சலத்தை ஏற்படுத்தினது என்றும் கூறுகிறார்.

ஆகவே இந்த உலக நன்மைகள் சந்தோஷத்தை கொடுப்பதில்லை என்று நாம் புரிந்து கொள்ள முடியும். மன மகிழ்ச்சி முகமலர்ச்சியை தரும் என்று வேதம் கூறுகிறது.

அதைத்தான் உலக வழக்கத்தில் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவார்கள்.

அதுமட்டுமல்ல மனதின் மகிழ்ச்சி நமக்கு நல்ல மருந்து (ஒளஷதம்) என்று வேதம் கூறுகிறது. சந்தோஷமாக இருப்பவன் நோயில்லாமல் வாழ முடியும்.

ஆனால் இன்றைக்கு சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை ஒருவிதமான மன அழுத்தம் தான் காணப்படுகிறது. எதிர்காலத்தை குறித்த கவலை, நன்மைகள் தாமதமாகும் போது ஏற்படும் மனதுக்கம்.

இவைகள் மனிதனுடைய மகிழ்ச்சியான வாழ்க்கையை கெடுத்து விடுகிறது.

மேல் சொல்லப்பட்ட கர்த்தருடைய வசனத்தில் சந்தோஷப்படுவார்கள் என்றும் மகிழ்ச்சி உண்டாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே தேவன் ஒருவர் மாத்திரமே நம்முடைய துக்கத்தை மாற்றி சந்தோஷத்தை தரமுடியும்.

ஏசாயா 53:4-ல் மெய்யாகவே அவர் நம்முடைய துக்கங்களை சுமந்தார் என்று வேதம் கூறுகிறது. தேவ சமுகத்தில் ஜெபித்த அன்னாள், யாபேஸ் என்பவர்கள் அதன்பிறகு துக்கமாயிருக்கவில்லை.

ஆகவே அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளை அவரிடம் சொல்லுங்கள்.

நிச்சயமாகவே உங்களுக்கு யாராலும் தடுக்க முடியாத நித்திய மகிழ்ச்சி உண்டாகும்.

தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும் நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாகும், ஆமென். சங்கீதம் 90:15

Author:

Bro. S. Nirmal,

Jesus With us Worship Centre,

Parvathipuram, Nagercoil.